

டெல்லியில் இன்று திரையரங்குகள் திறக்கப்படும் நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்ட இந்தப் பொது முடக்கம், பின்னர் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த செப்டம்பர் 30-ம் தேதி 5-ம் கட்டத் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.
கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியில் உள்ள பள்ளிகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்களை அக்டோபர் 15 முதல் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. அதேநேரம், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி உட்பட கரோனா பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திரையரங்குகளைப் பொறுத்தவரை, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் 50 சதவீத டிக்கெட்களை மட்டுமே விற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிக்கெட்களை முடிந்தவரை இணைய வழியில் வழங்க வேண்டும், போதுமான டிக்கெட் கவுன்ட்டர்களைத் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று (14.10.20) திரையரங்க உரிமையாளர்களைச் சந்திந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகள் திரையரங்குகளில் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று முதல்வர் கேஜ்ரிவால் திரையரங்க உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும், திரையரங்கினுள் பாப்கார்ன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை அனுமதிக்கக் கூடாது என்றும், பார்வையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பிவிஆர், ஐநாக்ஸ், சினிமா போலீஸ், பசிபிக் உள்ளிட்ட பல்வேறு திரையரங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இன்று டெல்லியில் திரையரங்குகள் திறக்கப்படும் நிலையில், மேற்கண்ட விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.