‘ஹேக்கிங்’ முயற்சி: சமூக வலைதளங்களில் இருந்து விலகிய சுஷாந்த் சகோதரி

‘ஹேக்கிங்’ முயற்சி: சமூக வலைதளங்களில் இருந்து விலகிய சுஷாந்த் சகோதரி
Updated on
1 min read

சுஷாந்த் சிங்கின் சகோதரியான ஷ்வேதா சிங் தனது சமூக வலைதளக் கணக்குகளை யாரோ ‘ஹேக்’ செய்ய முயல்வதாகக் கூறி அவற்றிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். பாலிவுட்டில் வாரிசு நடிகர்களுக்கே வாய்ப்புகளில் முக்கியத்துவம் தரப்படுவதாகவும், துறைக்குள் வரும் புதிய திறமையாளர்களின் வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுவதாகவும், வாரிசு அரசியல் தந்த மன அழுத்தம் காரணமாகவே சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார் என்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் வெடித்தது.

சுஷாந்தின் தற்கொலைக்கு அவரது குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனக்கசப்பும் ஒரு காரணம் என்றும் சமூக வலைதளங்களில் ஒரு கருத்து உலவியது.

வாரிசு அரசியலில் தொடங்கிய இந்த சர்ச்சை தற்போது போதைப் பொருள் வழக்கு வரை வந்துள்ளது. சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கடந்த மாதம் 8-ம் தேதி கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் வெளியாகியுள்ளார்.

இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் சகோதரியான ஷ்வேதா சிங் தனது சமூக வலைதளக் கணக்குகளை யாரோ ‘ஹேக்’ செய்ய முயல்வதாக கூறி அவற்றிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மன்னிக்கவும். என்னுடைய சமூக வலைதளக் கணக்குகளை யாரோ சிலர் பலமுறை லாகின் செய்ய முயன்று வருகின்றனர். இதனால் அவற்றிலிருந்து விலகுகிறேன்'' என்று கூறியுள்ளார்.

ஷ்வேதா சிங், சுஷாந்த் மரணத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் தொடர்ந்து பாலிவுட் நடிகர்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in