மனநலப் பிரச்சினைகள்: நடிகர் ஆமிர் கானின் மகள் ஐரா மனம் திறந்தார்

மனநலப் பிரச்சினைகள்: நடிகர் ஆமிர் கானின் மகள் ஐரா மனம் திறந்தார்
Updated on
1 min read

பாலிவுட் நட்சத்திரம் ஆமிர் கானின் மகள் ஐரா கான், தனக்கு மன அழுத்தம் (clinical depression) இருப்பதாகக் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை உலக மனநலத் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐரா ஒரு காணொலியைப் பகிர்ந்திருந்தார். இதில் மனநலம் பேணுதல் குறித்த உரையாடலைத் தொடங்க இது சரியான நேரம் என்று பேசியுள்ளார்.

"நான்கு வருடங்களுக்கும் மேலாக நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நான் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இப்போது நன்றாகத் தேறியுள்ளேன்.

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக, மனநலம் குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், என்ன செய்வதென்று எனக்குச் சரியாகப் புலப்படவில்லை. சரி, நான் எப்படித் தொடங்கினேனோ அப்படியே தொடங்குகிறேன். எதைப் பற்றி நான் மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டும்? மன அழுத்தம் வரும் அளவுக்கு நான் யார்? எனக்கு எல்லாம் இருக்கிறது இல்லையா?

நம் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடக்கின்றன. நம்மைக் குழப்பும், மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும் பல சூழல்கள், உணர்வுகளைக் கடந்து வருகிறோம். எல்லாவற்றையும் பற்றி இப்போதே பேசிவிட முடியாது. ஆனால், நான் சில விஷயங்களைப் புரிந்துகொண்டுவிட்டேன் என நினைக்கிறேன். குறைந்தது அவற்றை எப்படிப் புரிந்துகொள்ளலாம் என்பதை உணர்ந்திருக்கிறேன்.

எனவே, என்னுடன் இந்த மனநலம் பேணுவதற்கான வினோதமான, நகைச்சுவையான, சில நேரங்கள் குழந்தை பேசுவதைப் போன்ற, முடிந்தவரை நான் நேர்மையாக இருக்கும் பயணத்தில் என்னோடு வாருங்கள். ஒரு உரையாடலை ஆரம்பிப்போம்" என்று ஐரா பகிர்ந்துள்ளார்.

ஆமிர் கானுக்கும், அவரது முதல் மனைவி ரீனா தத்தாவுக்கும் பிறந்தவர் ஐரா கான். கடந்த வருடம், 'யூரிபெடீஸ் மெடியா' என்கிற மேடை நாடகம் மூலம் ஐரா கான் இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in