

தான் சினிமாவிலிருந்து விலகியிருப்பதற்கான காரணம் குறித்து ட்விங்கிள் கண்ணா கூறியுள்ளார்.
90களில் பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்தவர் ட்விங்கிள் கண்ணா. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாரூக் கான், சல்மான் கான், அக்ஷய் குமார் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் ராஜேஷ் கண்ணாவின் மகளான இவர் நடிகர் அக்ஷய் குமாரைத் திருமணம் செய்து கொண்டார்.
இறுதியாக 2010 ஆம் ஆண்டு வெளியான ‘டீஸ் மார் கான்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது சினிமாவிலிருந்து விலகியிருக்கும் இவர், 2015 ஆம் ஆண்டு முதல் புத்தகங்கள் எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது ‘வென் ஐ க்ரோ அப் ஐ வான்ட் டு பி’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்நிலையில் தான் சினிமாவிலிருந்து விலகியிருப்பதற்கான காரணம் குறித்து ட்விங்கிள் கண்ணா கூறியுள்ளார்.
இது குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியுள்ளதாவது:
''இன்றைய காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் நான் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் பெண்களுக்கென்று தனியாகக் கதைகள் அதிக அளவில் எழுதப்படவில்லை. ஆனால், நான் சினிமாவிலிருந்து விலக அது காரணமல்ல. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் ஸ்பாட்லைட்டிலிருந்து வெளியாகும் வெப்பம் எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை''.
இவ்வாறு ட்விங்கிள் கண்ணா கூறியுள்ளார்.