

ரியாவிடம் அனைவரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நடிகை ஹியூமா குரேஷி தெரிவித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை வைத்துப் பல்வேறு சர்ச்சைகள் உருவாகியுள்ளன. சுஷாந்த் சிங் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போதை மருந்து தடுப்புப் பிரிவு நடத்திய விசாரணையில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் சுஷாந்தின் காதலி ரியா உள்ளிட்ட ஐவரும் அடக்கம்.
ரியா சக்ரபர்த்தி உள்ளிட்ட பலரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அவருடைய ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வந்தது. மேலும், ரியாவுக்கு ஆதரவாக பாலிவுட்டில் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள்.
இதனிடையே, இன்று (அக்டோபர் 7) ரியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ரியா அடுத்த 10 நாட்களுக்கு அவர் பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். போதை மருந்து தடுப்புப் பிரிவிடம் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைப்பதோடு அவர்களிடம் சொல்லாமல் மும்பையை விட்டுச் செல்லக் கூடாது ஆகிய நிபந்தனைகளையும் மும்பை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது.
ரியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹியூமா குரேஷி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"ரியா சக்ரபர்த்தியிடம் எல்லோரும் மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்தக் கொலைச் சதி பற்றிப் பேச ஆரம்பித்த நபர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும். உங்களது நோக்கம் நிறைவேற ஒரு பெண்ணின், அவரது குடும்பத்தின் வாழ்க்கையை நாசமாக்கியது குறித்து நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்"
இவ்வாறு ஹியூமா குரேஷி தெரிவித்துள்ளார்.