என் மீது ரிச்சா தொடர்ந்த அவதூறு வழக்கு பொய்யானது: பாயல் கோஷ்

என் மீது ரிச்சா தொடர்ந்த அவதூறு வழக்கு பொய்யானது: பாயல் கோஷ்
Updated on
1 min read

தன் மீது ரிச்சா சட்டா தொடர்ந்த அவதூறு வழக்கு முற்றிலும் பொய்யானது என்று நடிகை பாயல் கோஷ் கூறியுள்ளார்.

இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என நடிகை பாயல் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக திரைத்துறையினரும் அவரது முன்னாள் மனைவிகளும் குரல் கொடுத்தாலும் பாயல் கோஷ் தனது நிலையில் தீர்மானமாக இருந்து வருகிறார்.

இதுகுறித்துக் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கோரி மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைப் பாயல் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக, தனது குற்றச்சாட்டில் ரிச்சா சட்டா உள்ளிட்ட அனுராக் காஷ்யப் படங்களில் நடித்த நடிகைகளின் பெயரையும் பயன்படுத்தியிருந்தார் பாயல். இதனால் ஆத்திரமடைந்த ரிச்சா பாயல் கோஷுக்கு எதிராக கடந்த திங்கள் (05.10.20) அன்று மும்பை உயர்நீதி மன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

தனது நற்பெயரைக் கெடுக்கும் வகையில் பாயல் செயல்பட்டதால் தனக்குப் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், இதற்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடாக பாயல் வழங்க வேண்டும் என்றும் ரிச்சா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ரிச்சா தொடர்ந்த அவதூறு வழக்கு பொய்யானது என்று பாயல் கோஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

''இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டாகும். இந்த வழக்கில் நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. ஏன் என்னுடைய புகழைக் கெடுக்க முயல்கிறார்? அதற்குப் பதில் அனுராக் ஏன் தன் பெயரைப் பயன்படுத்தினார் என்று ரிச்சா கேட்டிருக்கவேண்டும்.

எனக்கு ரிச்சாவைத் தனிப்பட்ட முறையில் தெரியாது. நாங்கள் இதை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறோம். என்னிடம் அனுராக் கூறியதைத்தான் நான் ஊடகங்களிடம் கூறினேன். நானாக யார் பெயரையும் கூறவில்லை''.

இவ்வாறு பாயல் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in