

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தயாரிப்பு நிறுவனம் இதிகாசம் சார்ந்த அறிவியல் புனைவுக் கதை ஒன்றை வெப் சீரிஸாகத் தயாரிக்கவுள்ளது.
'ரோர் ஆஃப் தி லயன்' என்கிற ஆவணப் படத்துடன் கடந்த ஆண்டு தயாரிப்பில் இறங்கினார் தோனி. தனது நிறுவனத்துக்கு தோனி எண்டர்டெய்ன்மெண்ட் என்று பெயர் வைத்தார்.
கபீர் கான் இயக்கியிருந்த 'ரோர் ஆஃப் தி லயன்', ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு வருட இடை நீக்கத்துக்குப் பின் எப்படி தோனி தலைமையில் எழுச்சி கண்டது என்பது பற்றிய ஆவணப் படம்.
அடுத்ததாக, இன்னும் வெளிவராத ஒரு புத்தகத்தின் அடிப்படையில் வெப்சீரிஸை இந்நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு அறிமுக எழுத்தாளரின் கதை இது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகச் செயல்படும் தோனியின் மனைவி சாக்ஷி, இந்த வெப் சீரிஸ் ஒரு பரபரப்பான சாகசக் கதையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
"இந்தப் புத்தகம், இதிகாசம் சார்ந்த அறிவியல் புனைவுக் கதை. அதி நவீனமான ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் ஒரு மர்மமான அகோரியின் பயணத்தை இது சொல்கிறது. இந்த அகோரி வெளிக்கொண்டு வரும் உண்மைகள், காலங்காலமாக இருந்து வரும் பல நம்பிக்கைகளைப் புரட்டிப் போடும்.
எழுத்தாளர் படைத்திருக்கும் இந்த உலகின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், கதை அம்சத்தையும் துல்லியமாகத் திரையில் கொண்டு வர விரும்புகிறோம். அதற்குத் திரைப்படமாக எடுப்பதை விட வெப் சீரிஸே சரியாக இருக்கும்" என்று சாக்ஷி கூறியுள்ளார்.
இந்தப் படத்துக்கான நடிகர்கள் தேர்வு, படப்பிடிப்பு இடங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.