

90-களில் 'சக்திமான்' தொடர் மூலம் பல ரசிகர்களைப் பெற்ற நடிகர் முகேஷ் கண்ணா, இந்தக் கதாபாத்திரத்தை வைத்து மூன்று திரைப்படங்களை எடுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
1997-லிருந்து 2005 வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் 'சக்திமான்'. மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வென்ற இந்தத் தொடர் குறிப்பாக சிறுவர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
தற்போது 'சக்திமான்' திரைப்படமாக உருவாகிறது. 3 பாகங்கள் கொண்ட திரை வரிசையாக இதை உருவாக்க, நடிகர் முகேஷ் கண்ணா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக முகேஷ் கண்ணா கூறியிருப்பதாவது:
"என் கனவு நனவாகிறது. 'சக்திமான்' தான் இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோவாக என்றும் இருப்பார். அவரை நான் சூப்பர் ஆசான் என்றும் அழைப்பேன். இப்போது நாங்கள் அதைத் பிரம்மாண்டத் திரைப்படமாக உருவாக்கவுள்ளோம். இதில் எனக்கு மகிழ்ச்சி.
இது எப்போதும் புதிதான, எந்தக் காலத்துக்கும் ஒத்துப்போகும் கதை. எந்த நேரத்திலும் நல்லவற்றைக் கெட்டவை ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றன. ஆனால், கடைசியில் நல்லதே வெல்லும்.
ஒரு தலைமுறையே 'சக்திமான்' பார்த்து வளர்ந்து, கற்றிருக்கிறது. 'சக்திமான் 2.0' வரும் என ரசிகர்களுக்குக் கூறி வருகிறேன். எனவே, இந்தத் திரைப்பட முயற்சி எனக்கு மகிழ்ச்சி. என்னுடன் வளர்ந்த ரசிகர்களின் மீது எனக்கு அதிக பொறுப்பு இருப்பதாக நான் உணர்கிறேன்.
வெற்றி உண்டாகட்டும் என்றே எல்லோரிடமும் வாழ்த்துச் சொல்லுவேன். ஆனால், அதை இப்போது எனக்கே சொல்லிக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். இறைவன் என்னோடு இருக்க வேண்டும்".
இவ்வாறு முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டு பிற்பாதியில் 'சக்திமான்' முதல் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.