

நடிகர் சோனு சூட்டுக்கு ஐ.நா. சார்பில் ‘சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதும் தேசிய அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதியின்றி சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்தனர்.
தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு ஆங்காங்கே அவர்கள் போராட்டங்களையும் நடத்தினர். அப்படிச் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.
வறுமையில் வாடிய விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை சோனு சூட் செய்து வந்தார். சமீபத்தில் பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க புதிய திட்டத்தையும் தொடங்கினார். இதனால் சமூக வலைதளங்களில் சோனு சூட்டுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவியதால் சோனுவுக்கு ‘சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளர்’ விருது வழங்கி ஐ.நா. சபை கவுரவித்துள்ளது.
இதுகுறித்து சோனு சூட் கூறியுள்ளதாவது:
''இது ஒரு அரிய கவுரவம். ஐ.நா. சபையின் அங்கீகாரம் மிகவும் சிறப்பானது. என் நாட்டின் மக்களுக்காக என்னால் என்ன செய்யமுடியுமோ அதை எந்த எதிர்பார்ப்புமின்றி செய்தேன். எனினும் இந்த அங்கீகாரமும், விருதும் மகிழ்ச்சியைத் தருகிறது.
ஐ.நா.வின் யுஎன்டிபி சார்பில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை 2030 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற என்னுடைய முழு ஆதரவையும் வழங்குவேன். இந்த முயற்சிகளால் பூமியும், மனித இனமும் மிகப்பெரிய அளவில் பலனடையும்''.
இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.