

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான விசாரணை எல்லாக் கோணங்களிலும் நடந்து வருகிறது என சிபிஐ கூறியுள்ளது.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி, மும்பையில் தனது இல்லத்தில், இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. பாலிவுட்டின் வாரிசு அரசியலுக்கு சுஷாந்த் பலி ஆனதாக பாலிவுட்டைச் சேர்ந்த நட்சத்திரங்களே குற்றம் சாட்ட ஆரம்பித்தனர்.
தற்கொலைக்குத் தூண்டியுள்ளனர், பணம் ஏமாற்றியுள்ளனர், நம்பிக்கை துரோகம், திருட்டு, அவரது விருப்பத்தை மீறி அவரை அடைத்து வைத்தது எனப் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு சுஷாந்தின் தந்தை ஜூலை 25 அன்று பாட்னா காவல்துறையிடம் புகார் அளித்தார். சுஷாந்தின் காதலி ரியா சக்ரவர்த்தி, ரியாவின் சகோதரர் ஷோவிக், ரியாவின் பெற்றோர் உள்ளிட்ட சிலர் இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
பிஹார் அரசின் வலியுறுத்தலின் பேரில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியது. ஒரு அணி மும்பைக்கு விரைந்தது. சாட்சிகளின் வாக்குமூலங்கள், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் சுஷாந்தின் வீட்டைப் பரிசோதனை செய்தது. சுஷாந்தின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை ஆய்வு என அடுத்தடுத்து நடவடிக்கைகள் துரிதமாக நடந்தன.
தொடர்ந்து இந்த மரணத்தில் போதை மருந்து தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடக்க, அமலாக்கப் பிரிவினர் ஒப்படைத்த ஆதாரத்தின் பேரில் போதை மருந்து தடுப்புப் பிரிவினர் ரியாவையும் அவரது சகோதரரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. பல பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சுஷாந்தின் குடும்ப வழக்கறிஞர் விகாஸ் சிங், சிபிஐ தரப்பு தாமதப்படுத்துவதாகக் கூறியிருந்தார். மேலும், சுஷாந்தின் உடலைப் பார்த்த எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர், அவர் கழுத்தை நெரித்ததற்கான சான்று இருக்கிறது என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்திருக்கும் சிபிஐ தரப்பின் செய்தித் தொடர்பாளர், "சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ நேர்மையான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதில் அத்தனை கோணங்களும் பரிசீலிக்கப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றன. எதையும் நாங்கள் இன்றுவரை விட்டு வைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்கள் குழு இந்த விசாரணையில் சிபிஐக்கு உதவி வருகிறது. அவர்கள் இன்னும் இறுதி அறிக்கையை விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது.