சண்டைக்குப் பிறகு சமாதானம்: மீண்டும் கணவருடன் இணைந்த பூனம் பாண்டே

சண்டைக்குப் பிறகு சமாதானம்: மீண்டும் கணவருடன் இணைந்த பூனம் பாண்டே
Updated on
1 min read

தன் கணவர் சாம் பாம்பேவுக்கு எதிராக குடும்ப வன்முறைப் புகார் கொடுத்த நடிகை பூனம் பாண்டே மீண்டும் அவருடன் இணைந்துள்ளார்.

பூனம் பாண்டே கோவாவில் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். அங்கு வந்த கணவர் சாம் பாம்பே தன்னை அச்சுறுத்தி, வன்கொடுமை செய்து, துன்புறுத்தியதாக பூனம் பாண்டே புகார் அளித்தார். இதனையடுத்து சாம் பாம்பே கைது செய்யப்பட்டார். பின்னர் சாம் ஜாமீனில் வெளியே வந்தாலும் வழக்குத் தொடர்ந்தது. தற்போது பூனம் பாண்டே இந்த வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளார்.

இதுபற்றிப் பேசியிருக்கும் பூனம் பாண்டே, "நாங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்கிறோம். இருவரும் இணைந்துவிட்டோம். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிக அதிகமாக நேசிக்கிறோம். பித்தாக இருக்கிறோம். எந்தத் திருமணத்தில் ஏற்ற இறக்கங்கள் இல்லை சொல்லுங்கள்?" என்று கூறியுள்ளார்.

பூனம் பாண்டே உடனான பிரச்சினை குறித்து சாம், "எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது. விஷயங்கள் ஊதிப் பெரிதாக்கப்பட்டு விட்டன. திரிக்கப்பட்டன என்றே சொல்வேன்" என்று குறிப்பிட்டார்.

வரப்போகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூனம் போட்டியாளராகப் பங்கேற்கவுள்ளதால்தான் தேவையில்லாமல் இப்படிப் பரபரப்பு கூட்டுகிறார் என்ற செய்திகளை பூனம் பாண்டே மறுத்துள்ளார். தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அளவுக்குப் பெரிய பிரபலம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக ஒரு பேட்டியில் இந்த வழக்கைத் திரும்பப் பெறுவது குறித்து யோசித்து வருவதாகக் கூறியிருந்த பூனம் பாண்டே, "என்னை இம்முறை மிக மோசமாக அடித்தார். கிட்டத்தட்டப் பாதிக் கொலை. எவ்வளவு நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன் என்று தெரியவில்லை. ஆனால், அவர் என் முன் அழுதுகொண்டே இருந்ததால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

ஒவ்வொரு முறை என்னை அவர் அடித்த பின்பும் மன்னிப்பு கேட்டு அழுகிறார். இம்முறையும் அதையே செய்தார். இது திரும்ப நடக்காது, உன்னை நன்றாக நடத்துகிறேன் என்று சத்தியம் செய்திருக்கிறார். ஆனால் இதைத் திரும்பத் திரும்பச் செய்கிறார். அவரால்தான் என் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது" என்று கூறியிருந்தார்.

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பூனம் பாண்டேவுக்கும் சாம் பாம்பேவுக்கும் திருமணம் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in