

கரண் ஜோஹரின் வீட்டில் நடந்த பார்ட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோவுக்கும் வழக்குக்கும் தொடர்பில்லை என்று என்சிபி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட நாள் முதலே சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்களில் கரண் ஜோஹரும் ஒருவர்.
சுஷாந்துக்கு கரண் ஜோஹர் பட வாய்ப்புகளை மறுத்து வாரிசு நடிகர்களுக்கே முன்னுரிமை கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு கரண் ஜோஹரின் வீட்டில் நடந்த ஒரு பார்ட்டியின்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
அதில் கலந்துகொண்ட பிரபலங்கள் அனைவரும் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததாகவும், இதனால் போதைப் பொருள் வழக்கில் கரண் ஜோஹருக்குத் தொடர்பிருக்கலாம் என்கிற ரீதியில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்தச் செய்திக்கு கரண் ஜோஹர் மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். தான் போதைப் பொருட்களைத்தான் பயன்படுத்துவதுமில்லை. அவற்றை ஊக்குவிப்பதுமில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கரண் ஜோஹர் வீட்டில் நடந்த பார்ட்டி வீடியோவுக்கும், போதைப் பொருள் வழக்குக்கும் தொடர்பில்லை என்று என்சிபி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நேற்று (27.09.20) அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய என்சிபி தென்மேற்கு பிராந்திய துணை இயக்குநர் ஜெனரல் எம்.ஏ ஜெயின், ''கரண் ஜோஹர் வீட்டில் நடந்த பார்ட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோவுக்கும் தற்போது நடந்து கொண்டிருக்கும் வழக்கு விசாரணைக்கும் தொடர்பில்லை'' என்றார்.
அந்த பார்ட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோவில் நடிகைகள் தீபிகா படுகோன், மலைகா அரோரா, நடிகர்கள் ரன்பீர் கபூர், ஷாஹித் கபூர் உள்ளிட்டோர் இருந்தது குறிப்பிடத்தக்கது..