

போதைப் பொருள் வழக்கு விசாரணையில், ஊடகங்களின் தலையீட்டுக்கு எதிராக நடிகை ரகுல் ப்ரீத் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின்போது, சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரவர்த்தி சுஷாந்துக்குத் தெரியாமலேயே போதைப் பொருள் கொடுத்து, அவரது மனநிலையைப் பாதிக்கச் செய்ய முயன்றதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 12 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் உள்ளிட்டோருக்கு என்சிபி சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று முன் தினம் (25.09.20) ரகுல் ப்ரீத் சிங், நேற்று (26.09.20) தீபிகா, சாரா, ஷ்ரத்தா உள்ளிட்டோரும் என்சிபி அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடந்த 23.09.20 அன்று படப்பிடிப்புக்காக தான் ஹைதரபாத்தில் இருந்ததாகவும், தனக்கு என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் ரகுல் ப்ரீத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடைய ஹைதரபாத் வீட்டுக்கோ அல்லது மும்பை வீட்டுக்கோ எந்த சம்மனும் வரவில்லை என்றும் இதை உறுதி செய்ய தனது தந்தை 24.09.20 அன்று தனது மும்பை வீட்டுக்குச் சென்று பார்த்ததாகவும் ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.
தனக்கு என்சிபி அதிகாரிகளிடமிருந்து 24.09.20 அன்று காலை 11.30 மணிக்கே வாட்ஸ் அப்பில் சம்மன் வந்ததாகவும், அதில் 23.09.20 என்ற தேதி போடப்பட்டிருந்ததாகவும் ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.
தனக்கு வரவிருக்கும் சம்மன் குறித்து முதல் நாளே ஊடகங்களுக்குத் தெரிந்தது எப்படி என்றும், இந்த வழக்கு விசாரணையில் ஊடகங்களின் தலையீட்டைத் தடுக்க வேண்டும் எனவும் ரகுல் ப்ரீத் சிங் தனது மனுவில் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் போதைப் பொருள் வழக்கில் ஊடகங்கள் தனது பெயரைப் பயன்படுத்துவதாக ரகுல் ப்ரீத் சிங் தொடர்ந்த வழக்கில், ஊடகங்கள் கட்டுப்பாட்டோடு செயல்படவேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.