

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பான விசாரணைக்காக, போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அலுவலகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நேற்று ஆஜரானார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு போதைப் பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. மேலும், சுஷாந்த் சிங்குக்கு அவர் போதைப் பொருட்களை வழங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட என்சிபி அதிகாரிகள், ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 12-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பிரபல பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரதா கபூர், ரகுல் ப்ரீத் ஆகியோருக்கு என்சிபி சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
அதை ஏற்று, மும்பைஎன்சிபி அலுவலகத்தில் ரகுல் ப்ரீத் சிங் நேற்று காலை ஆஜரானார். அவரிடம் 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரீஷ்மா பிரகாஷிடமும் நேற்று விசாரணை நடந்தது.தீபிகா படுகோன் இன்று ஆஜராவார் எனக் கூறப்படுகிறது.