உலகின் அதிக செல்வாக்குள்ள 100 ஆளுமைகள்: ஆயுஷ்மான் குரானா இடம்பிடித்தார்

உலகின் அதிக செல்வாக்குள்ள 100 ஆளுமைகள்: ஆயுஷ்மான் குரானா இடம்பிடித்தார்
Updated on
1 min read

உலகின் அதிக செல்வாக்குள்ள 100 ஆளுமைகள் என்ற பட்டியலில் நடிகர் ஆயுஷ்மான் குரானாவும் இடம்பெற்றுள்ளார்.

உலகின் அதிக செல்வாக்குள்ள 100 ஆளுமைகள் என்ற பட்டியலை டைம் வார இதழ் வெளியிட்டுள்ளது. இதில் ஐந்து இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை கண்டுபிடித்த லண்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவர் ரவீந்திர குப்தா மற்றும் ஷாகீன் பாக், போராட்டங்களில் பங்கெடுத்த பிலிகிஸ் தாதி ஆகியோருடன் சேர்ந்து நடிகர் ஆயுஷ்மான் குரானாவும் இடம்பெற்றுள்ளார்.

கலைஞர்கள் என்ற பிரிவில் இடம்பெற்றுள்ள ஆயுஷ்மான் குரானாவுடன் ‘பாராஸைட்’ திரைப்படத்தின் இயக்குநர் பாங் ஜூன் ஹோ, ஃப்ளீபேக் வெப் சீரிஸை உருவாக்கி நடித்திருக்கும் ஃபோபி வாலர் ப்ரிட்ஜ், ஹாலிவுட் நட்சத்திரம் மைக்கல் பி ஜோடர்ன், இசைக் கலைஞர்கள் செலீனா கோமேஸ், ஜே பால்வின் மற்றும் ஜெனிஃபர் ஹட்ஸன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடிப்பதன் மூலம் பிரபலமாகியுள்ள ஆயுஷ்மான் குரானா 'அந்தாதூன்' திரைப்படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறித்துப் பேசியுள்ள குரானா, "எனக்குக் கொடுக்கப்பட்ட இந்த அங்கீகாரத்துக்குத் தலை வணங்குகிறேன். ஒரு கலைஞனாகத் திரைப்படங்களின் மூலம் இந்தச் சமூகத்தில் நேர்மறையான ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவே பங்காற்றியிருக்கிறேன். எனது நம்பிக்கைக்கும், எனது பயணத்துக்கும் இந்தத் தருணம் மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கிறது.

மக்களிடமும், சமூகத்திலும் சரியான உரையாடல்களைத் தொடங்கி வைப்பதன் மூலம் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான சக்தி திரைப்படங்களுக்கு உள்ளது என்பதை நான் என்றும் நம்பியிருக்கிறேன். எனது கதைத் தேர்வுகளின் மூலமாக என் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்குப் பங்காற்ற முடிந்திருக்கிறது என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in