

தனக்கு போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலுக்கு தியா மிர்ஸா மறுப்பு தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் மரண வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் போதை மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. வாட்ஸ் அப் உரையாடலில் போதை மருந்து வாங்குவது தொடர்பாகப் பேசியிருந்தது அமலாக்கப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துதான் போதை மருந்து தடுப்புப் பிரிவு இந்த விசாரணையைக் கையிலெடுத்தது.
தொடர்ந்து ரியா சக்ரபர்த்தி, ரியாவின் சகோதரர் உள்ளிட்ட சிலரை போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், தியா மிர்ஸா உள்ளிட்ட பிரபலங்களும் போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸாரின் பட்டியலில் இருப்பதாகவும் விரைவில் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்தத் தகவலுக்கு நடிகை தியா மிர்ஸா மறுப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:
''அடிப்படையற்ற இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது மற்றும் எனது நற்பெயரைக் கெடுப்பதற்காகப் பரப்பப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இதுபோன்ற அற்பமான தகவல்கள் எனது நற்பெயரில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் பல ஆண்டுகளாக கடின உழைப்பால் நான் கட்டியெழுப்பிய எனது சினிமா வாழ்க்கைக்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நான் என் வாழ்க்கையில் எந்தவொரு வடிவத்திலும் எந்தவொரு போதைப்பொருளையோ அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்களையோ வாங்கியதுமில்லை, உட்கொண்டதுமில்லை. இந்தியாவின் சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகளாக எனக்குக் கிடைக்கும் சட்டரீதியான தீர்வுகளின் மூலம் தொடர விரும்புகிறேன். எனக்கு உறுதுணையாக நின்ற எனது ஆதரவாளர்களுக்கு நன்றி''.
இவ்வாறு தியா மிஸ்ரா கூறியுள்ளார்.