கரோனாவால் நஷ்டம்; கை கொடுத்த அக்‌ஷய் குமாரின் யோசனை: ‘பெல்பாட்டம்’ தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

கரோனாவால் நஷ்டம்; கை கொடுத்த அக்‌ஷய் குமாரின் யோசனை: ‘பெல்பாட்டம்’ தயாரிப்பாளர் நெகிழ்ச்சி
Updated on
1 min read

அக்‌ஷய் குமார் நடிப்பில் ரஞ்சித் எம். திவாரி இயக்கி வரும் படம் ‘பெல்பாட்டம்’. இப்படத்தில் அக்‌ஷய் குமாருடன் வாணி கபூர், லாரா தத்தா, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்த் வருகின்றனர். பூஜா எண்டெர்டெய்ன்மெண்ட் மற்றும் எம்மேய் எண்டெர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்காட்லாண்டில் நடைபெற்று வருகிறது. கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு வெளிநாட்டில் படமாக்கப்பட்டு வரும் முதல் படம் இதுவாகும்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஸ்காட்லாந்து சென்ற ‘பெல்பாட்டம்’ படக்குழுவினர் 14 நாட்கள் தனிமைக்கு பிறகே படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனை உணர்ந்த அக்‌ஷய்குமார் படப்பிடிப்பில் 8 மணி நேரம் மட்டும் பணிபுரிவது என்ற தனது 18 ஆண்டு கால நிபந்தனையை தளர்த்தியுள்ளார். திட்டமிட்ட தினத்துக்குள் படப்பிடிப்பை முடிப்பதற்காக தினமும் இரண்டு ஷிஃப்ட்களில் நடித்து தருவதாக தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளார். இதனை படக்குழுவினருக்கும் வலியுறுத்தியுள்ளார். இந்த தகவலை ‘பெல்பாட்டம்’ படத்தின் தயாரிப்பாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.

மேலும் அக்‌ஷய் குமார் யோசனையின் படி படக்குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து படப்பிடிப்பை விரைவாக நடத்தி வருவதாகவும் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி கூறியுள்ளதாவது:

அக்‌ஷய் குமார் நிச்சயமாக தயாரிப்பாளர்களுக்கான ஒரு நடிகர். அவருடன் பணிபுரிவதே கவுரவம். எப்போதுமே அவர் அனைவருக்காகவும் அனைத்துக்காகவும் சிந்திக்கக் கூடியவர். படக்குழுவினரின் பாதுகாப்பு ஆகட்டும், தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளக் கூடிய சவால்களுக்கு உதவுவது ஆகட்டும், இந்த மனிதர் சுத்த தங்கம். 18 ஆண்டுகளில் முதல்முறையாக இரண்டு ஷிஃப்ட்களில் அக்‌ஷய்குமார் பணிபுரிகிறார். இரண்டு குழுக்களாக பிரிந்து பணியாற்றுமாறு அவர் பரிந்துரை செய்தது அற்புதமான ஒரு விசயம். அவருடைய யோசனையால் படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்துடன் வேலை செய்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in