நான் சண்டைக்காரியா? நிரூபித்தால் ட்விட்டரை விட்டு விலகுகிறேன்: கங்கணா சவால்

நான் சண்டைக்காரியா? நிரூபித்தால் ட்விட்டரை விட்டு விலகுகிறேன்: கங்கணா சவால்
Updated on
1 min read

நான் சண்டையைத் தொடங்கியதை யாரேனும் நிரூபித்தால் நான் ட்விட்டரை விட்டு விலகுகிறேன் என்று கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.

நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் பாலிவுட்டில் நிலவி வரும் மாபியா விவகாரம், போதைப் பொருள் விவகாரம் குறித்து நடிகை கங்கணா வெளிப்படையாகப் பேசியிருந்தார். தொடர்ந்து மும்பையை மினி பாகிஸ்தான் என்று விமர்சித்த விவகாரத்தில் சிவசேனா - கங்கணா ரணாவத் இடையே சர்ச்சை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மும்பை பாந்த்ராவில் உள்ள கங்கணா அலுவலகத்தின் சில பகுதிகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளன என்று கூறி இடிக்கப்பட்டது. மும்பை மாநகராட்சியின் இந்தச் செயலுக்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில், கங்கணாவின் வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார். இந்த விவகாரம் ஊடகங்களில் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது.

டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர், ஜெயா பச்சன், ஊர்மிளா உள்ளிட்டோரின் விமர்சனங்களுக்கு கங்கணா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து வருகிறார். இதனிடையே நேற்று பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் - கங்கணா இடையே மோதல் உருவானது.

அனுராக் உடன் நடந்த கருத்து மோதலைத் தொடர்ந்து கங்கணா ட்விட்டர் பக்கத்தில் சண்டைகளை எப்போதும் தான் தொடங்குவதில்லை என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

''என்னைப் பலரும் சண்டைக்காரி என்று கூறுகின்றனர். ஆனால், அது உண்மையில்லை. எப்போதும் சண்டையை நான் தொடங்கியதாகக் காட்டவே முடியாது. நான் சண்டையைத் தொடங்கியதை யாரேனும் நிரூபித்தால் நான் ட்விட்டரை விட்டு விலகுகிறேன். நான் சண்டைகளைத் தொடங்குவதில்லை. மாறாக, அவற்றை முடிக்கவே செய்கிறேன். யாரேனும் உங்களை சண்டைக்கு அழைத்தால் அதை நிராகரியுங்கள் என்று கிருஷ்ணர் கூறியுள்ளார்''.

இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in