

சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பான விசாரணையில், பாலிவுட்டில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நடிகை ரியா, அவரது சகோதரர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சூழலில், பாஜக எம்.பி.யும், நடிகருமான ரவி கிஷண், இந்தி திரையுலகில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாநிலங்களவையில் குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, சமாஜ்வாதி எம்.பி.யும் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், “ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகத்தின் நற்பெயரைக் கெடுக்கக் கூடாது” என்று கூறினார்.
ஜெயா பச்சனின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பும் ஆதரவும் எழுந்தது.
ரவி கிஷணின் கருத்துக்கு பாஜக உறுப்பினரும் நடிகையுமான ஜெயப்பிரதா ஆதரவு தெரிவித்திருந்தார். ஜெயா பச்சன் இந்த விவகாரத்தை அரசியலாக்குவதாகவும், நாடே சுஷாந்த் வழக்குக்குக் காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜெயப்பிரதாவின் பேட்டியைக் குறிப்பிட்டு நடிகையும் காங்கிரஸ் பிரமுகருமான நக்மா, சிபிஐ, என்சிபிக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நக்மா கூறியுள்ளதாவது:
''சுஷாந்த் வழக்கில் என்ன நடக்கிறது என்ற ஜெயப்பிரதாவின் கேள்விக்கு சிபிஐ, என்சிபி, அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும். இதற்கான தீர்வு என்னவென்று தெரிந்துகொள்ள அனைவரும் காத்திருக்கிறோம். ஆனால் இன்னும் முடிவு கிடைக்கவில்லை.
ஒட்டுமொத்த நாடும் சுஷாந்த் வழக்கிற்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று அனைத்து பாஜக உறுப்பினர்களும் பாலிவுட் போதைப் பொருள் விவகாரத்தைப் பேசத் தொடங்கி விட்டனர்''.
இவ்வாறு நக்மா கூறியுள்ளார்.