பொழுதுபோக்குத் துறை அதிக நச்சுத்தன்மை கொண்டது: கங்கணா ரணாவத்

பொழுதுபோக்குத் துறை அதிக நச்சுத்தன்மை கொண்டது: கங்கணா ரணாவத்
Updated on
1 min read

வலிமையான ஆன்மிக மனம் உள்ளவர்களால் மட்டுமே பொழுதுபோக்குத் துறையின் மாயை என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என நடிகை கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.

இன்று (செப்டம்பர் 16) காலை தனது ட்விட்டர் பதிவில் "பொழுதுபோக்குத் துறை அதிக நச்சுத்தன்மை கொண்டது. விளக்குகளும், கேமராவும் நிறைந்திருக்கும் இந்த போலி உலகம், மாற்று யதார்த்த உலகம் என்ற ஒன்று இருப்பதாக ஒருவரை நம்பவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாயையைப் புரிந்து கொள்ள, மிக வலிமையான ஆன்மிக மனத்தால் மட்டுமே முடியும்" என்று கங்கணா பகிர்ந்துள்ளார். தான் கண்ணாடியைப் பார்த்து லிப்ஸ்டிக் அணிந்து கொள்ளும் புகைப்படம் ஒன்றை இதனுடன் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக நடிகையும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜெயா பச்சன், பாலிவுட்டின் பெயரை சிலர் திட்டமிட்டு கெடுத்து வருகின்றனர் என்று பேசியிருந்தார். கங்கணாவின் பெயரைக் குறிப்பிடவில்லையென்றாலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த கங்கணா, ஜெயா பச்சனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் விமர்சித்துள்ளார்.

மும்பையிலிருந்து தனது சொந்த ஊரான மணாலி திரும்பியுள்ள கங்கணா, செல்வதற்கு முன்பு, தான் கனத்த இதயத்துடன் மும்பையை விட்டுச் செல்வதாகவும், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டது சரியே என்றும் ட்வீட் பகிர்ந்தார். இதற்கு சிவசேனா கட்சியின் நாளிதழான சாம்னாவில், மறைமுகமாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in