ஓடிடியில் 'லட்சுமி பாம்' வெளியீட்டுத்தேதி அறிவிப்பு

ஓடிடியில் 'லட்சுமி பாம்' வெளியீட்டுத்தேதி அறிவிப்பு
Updated on
1 min read

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'லட்சுமி பாம்' படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த படம் 'காஞ்சனா'. தற்போது இந்தப் படம் 'லட்சுமி பாம்' என்கிற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடிக்க, லாரன்ஸ் இயக்கியுள்ளார்.

கரோனா நெருக்கடியால் தற்போது இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியீடாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகவில்லை. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, அந்தக் காட்சிகளைச் சேர்த்தவுடன்தான் படத்தை வெளியிட லாரன்ஸ் முடிவு செய்திருப்பதாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

மேலும், ஐபிஎல் தொடங்கவுள்ளதால் 'லட்சுமி பாம்' வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்கள்.

இதனால் 'லட்சுமி பாம்' வெளியீடு குறித்துப் பல்வேறு செய்திகள் வெளியான வண்ணமிருந்தன. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 'லட்சுமி பாம்' படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதியை டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. தீபாவளிக் கொண்டாட்டமாக நவம்பர் 9-ம் தேதி 'லட்சுமி பாம்' வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பால் 'லட்சுமி பாம்' படத்தின் வெளியீடு தொடர்பாக உலவிய வதந்திகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in