ஐபிஎல் ஒளிபரப்பு எதிரொலி: ஓடிடியிலும் தள்ளிப்போகும் திரைப்படங்களின் வெளியீடு

ஐபிஎல் ஒளிபரப்பு எதிரொலி: ஓடிடியிலும் தள்ளிப்போகும் திரைப்படங்களின் வெளியீடு
Updated on
1 min read

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாகத் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரையரங்க வெளியீட்டுத் தயாராக இருந்த பல்வேறு திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகத் தொடங்கின. ஓடிடி தளங்களின் சந்தாதாரர்கள் எண்ணிக்கையும் முன்பை விட அதிகரித்தது. இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் பெரிய பட்ஜெட்டில் உருவான பாலிவுட் படங்களின் உரிமைகளை வாங்கி அப்படங்களின் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்திருந்தது. அதில் 'தில் பெச்சாரா', 'லக்‌ஷ்மி பாம்' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

இதில் ‘தில் பெச்சாரா’, ‘லூட்கேஸ்’, ‘குதா ஹாஃபிஸ்’,‘சடக் 2’ உள்ளிட்ட சில படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. மீதமிருந்த ‘காஞ்சனா’ படத்தின் ரீமேக்கான ‘லக்‌ஷ்மி பாம்’, அபிஷேக் பச்சனின் ‘தி பிக் புல்’, அஜய் தேவ்கனின் ‘பூஜ்’ ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 19 ஆம் தேதி இந்த வருட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் ரசிகர்களின்றி நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகள் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. இந்த நேரத்தில் திரைப்படங்களை வெளியிட்டால் ஐபிஎல் போட்டிகளுக்குப் பார்வையாளர்கள் குறையலாம் என்ற காரணத்தால் படங்களின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் ‘லக்‌ஷ்மி பாம்’ தீபாவளி தினத்தன்றும், ‘பூஜ்’ மற்றும் ‘தி பிக் புல்’ ஆகிய திரைப்படங்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in