இறந்து போனதாக செய்தி: அனுராக் காஷ்யப் கிண்டல்

இறந்து போனதாக செய்தி: அனுராக் காஷ்யப் கிண்டல்
Updated on
1 min read

இயக்குநர் அனுராக் காஷ்யப், தான் இறந்து போனதாக வந்த செய்தியைக் கிண்டலடித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வெளிப்படையான, பரபரப்பான கருத்துகளைப் பேசி சர்ச்சையில் மாட்டிக் கொள்ளும் பிரபலங்களில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் ஒருவர். சமீபத்தில் இவர் இறந்துவிட்டதாக கேஆர்கே பாக்ஸ் ஆஃபிஸ் என்கிற இணையதளம் செய்தி வெளியிட்டு, அவரது புகைப்படத்துடன் ட்விட்டரில் பகிர்ந்திருந்தது.

இந்த தளம், கமல் ஆர் கான் என்கிற இன்னொரு சர்ச்சை பாலிவுட் பிரபலத்தின் தளம். அதிகாரப்பூர்வ பக்கத்திலிருந்து பகிரப்பட்ட இந்தச் செய்தியை கவனித்த அனுராக், இதைப் பகிர்ந்து, அத்துடன் நக்கலான ஒரு பதிவையும் இட்டிருந்தார்.

அதி, "எமதர்மராஜனை நேற்று சந்தித்தேன். இன்று என் வீடு வரை அவரே உடன் பாதுகாத்து வந்து விட்டுச் சென்றார். 'நீ இன்னும் நிறையத் திரைப்படங்கள் எடுக்க வேண்டும். நீ இன்னும் படங்கள் எடுக்கவில்லையென்றால், அந்தப் படங்களை முட்டாள்களும், பக்த்ஸும் (bhakts) புறக்கணிக்கவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும்' என்றார். அவர்கள், தங்களின் வாழ்க்கையில் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள நான் உதவவே என்னை மீண்டும் பூமியில் அவர் விட்டுச் சென்றுள்ளார்" என்று அனுராக் குறிப்பிட்டுள்ளார்.

இணைய கிண்டல்கள், நக்கல்கள் அனுராக் காஷ்யப்புக்கு புதிதல்ல. சில ஆண்டுகள் முன்பு இப்படியான இணைய நையாண்டிகள் பற்றிப் பேசுகையில், நம் நாட்டில் நிறைய மக்கள் வெறுப்பில் இருக்கின்றனர். இணையத்தில் இப்படிக் கிண்டல் செய்வதால், திட்டுவதால் அவர்கள் மனம் லேசாகிறது. எனவே பரவாயில்லை என்று கூறியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in