13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் அக்‌ஷய்குமார் - ப்ரியதர்ஷன் 

13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் அக்‌ஷய்குமார் - ப்ரியதர்ஷன் 
Updated on
1 min read

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடித்த படங்கள் ‘ஹெரா பெரி’ (2000) மற்றும் ‘பூல் புலைய்யா’ (2007). இப்படங்கள் பாலிவுட்டில் பெரும் வெற்றி பெற்றன. ஃபாஸில் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான ‘மணிசித்ரதாழு’ படத்தின் ரீமேக்கான ‘பூல் புலைய்யா' திரைப்படம் இன்று வரை இந்தியில் ஒரு கிளாசிக் திரைப்படமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ப்ரியதர்ஷன் மற்றும் அக்‌ஷய்குமார் இருவரும் ஒரு புதிய படத்தில் மீண்டும் இணையவுள்ளனர். இப்படத்தின் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் கரோனா அச்சுறுத்தலால் வரும் டிசம்பர் மாதம் தொடங்கவேண்டிய படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

13 ஆண்டுகளுக்கு பிறகு அக்‌ஷய்குமார் - ப்ரியதர்ஷன் கூட்டணியில் உருவாகவுள்ள இப்படத்தை அக்‌ஷய் குமாரே தயாரிக்கவும் செய்கிறார். முழு நீள நகைச்சுவை படமாக உருவாகவுள்ள இப்படத்துக்கு இன்னும் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை.

இது குறித்து ப்ரியதர்ஷன் கூறியுள்ளதாவது:

இத்தனை ஆண்டுகளும் அக்‌ஷய்குமாரை அணுக என்னிடம் சரியான கதை உள்ளதா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அவருடைய கதவுகள் எப்போதும் எனக்காக திறந்தே இருக்கும். ஆனால், நான் தான் அவரிடம் செல்லவில்லை. அவர் இன்னும் அப்படியே நல்ல கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் எனக்கு சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதால் என்னால் சில நடிகர்களை எளிதில் அணுகமுடிவதில்லை. ஏராளமான படங்களை இயக்கிய பிறகு, நடிகர்களிடம் சென்று கெஞ்சுவதற்கு நான் விரும்பவில்லை. அதற்கு பதில் என்னுடன் சேர விரும்புவர்களை வைத்து நான் படம் எடுப்பேன்.

வரும் டிசம்பர் மாதம் படவேலைகளை தொடங்க நானும் அக்‌ஷயும் தீர்மானித்தோம். ஆனால் கரோனாவால் அனைத்தும் தாமதமாகி விட்டது.

இவ்வாறு ப்ரியதர்ஷன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in