

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
'தெறி', 'மெர்சல்' மற்றும் 'பிகில்' என்று விஜய்யுடன் இணைந்து மூன்று ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் அட்லி. 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தை அடுத்து அட்லி இயக்குவது என்று முடிவாகிவிட்டது.
'ஜீரோ' படத்தின் தோல்விக்குப் பிறகு இன்னும் ஷாரூக்கான் நடிக்கவுள்ள எந்தவொரு படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. முதலில் அட்லி படத்தை தொடங்க திட்டமிட்டார் ஷாரூக்கான்.
ஆனால், யாஷ்ராஜ் நிறுவனம் தங்களுடைய 50-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு படங்களைத் திட்டமிட்டு வருகிறது. அதில் சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் ஷாரூக்கான் - ஜான் ஆபிரஹாம் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தைக் குறைந்த நாட்களில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தப் படத்துக்குப் பிறகே அட்லி படத்துக்கு தேதிகள் ஒதுக்கவுள்ளார் ஷாரூக்கான். அவரது ரெட் சில்லீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. தற்போது இந்தப் படத்துக்கு 'சங்கி' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதில் ஷாரூக்கானுடன் 4-வது முறையாக நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தீபிகா படுகோன். முன்னதாக 'ஓம் சாந்தி ஓம்', 'சென்னை எக்ஸ்பிரஸ்' மற்றும் 'ஹேப்பி நியூ இயர்' ஆகிய படங்களில் ஷாரூக்கான் - தீபிகா படுகோன் கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது.
ஷாரூக்கான் நடிக்கவுள்ள படங்கள் குறித்து எந்தவொரு தகவலும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. ஆனால், தொடர்ச்சியாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாக ஷாரூக்கான் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.