

சிவசேனா தலைவர்களுடனான கருத்து மோதல் முற்றி வரும் நிலையிலும் தனது மகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்த பாரதிய ஜனதா கட்சிக்கு, கங்கணா ரணாவத்தின் தாய் ஆஷா ரணாவத் நன்றி தெரிவித்துள்ளார். இந்த செயல் தன்னை பாஜக ஆதரவாளராக மாற்றிவிட்டது என்றும் ஆஷா கூறியுள்ளார்.
தனியார் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "ஒட்டு மொத்த தேசத்தின் ஆசிர்வாதங்களும் கங்கணாவுக்கு இருக்கிறது. என் மகள் எப்போதுமே உண்மைக்காக குரல் கொடுத்திருக்கிறாள் என்பதில் எனக்குப் பெருமை. மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கும் அவர்கள் கட்சிக்கும் தொடர்பில்லை. நாங்கள் காங்கிரஸ் பின்புலம் கொண்டவர்கள்.
எனது மாமனாரின் தந்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அந்த காலத்திலிருந்தே நாங்கள் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்திருந்தாலும் கூட பாஜக எங்களுக்கு ஆதரவு தந்திருக்கிறது. அமித் ஷா என் மகளுக்குப் பாதுகாப்பு வழங்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றி. மும்பையில் என்ன நடந்ததென்று பாருங்கள். என் மகளுக்கு பாதுகாப்பு இருந்திருக்கா விட்டால் என்ன நடந்திருக்கும் என்பது கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்" என்று ஆஷா கூறியுள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணையில் மும்பை காவல்துறையை விமர்சித்திருந்த கங்கணா, மும்பை நகரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரோடு ஒப்பிட்டிருந்தார். இதிலிருந்து, மகாராஷ்டிர மாநிலத்தை ஆண்டு வரும் சிவசேனா கட்சியினருக்கும், கங்கணாவுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்தது நினைவுகூரத்தக்கது.