

'இன் டு தி வைல்ட் வித் பியர் க்ரில்ஸ்' என்கிற நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகிறது. காடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் விலங்குகளைப் பற்றித் தெரிந்துகொள்வது, அந்தச் சூழலுக்கு ஏற்றாற்போல வாழ்வது, உணவு சமைத்துச் சாப்பிடுவது, கரடு முரடான இடங்களில் பயணம் செய்து சாகசம் காட்டுவது என இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகப் பிரபலம்.
சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், நடிகர் ரஜினிகாந்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இயற்கை, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே இப்படிப் பிரபலங்களைப் பங்கேற்க வைத்து நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் அடுத்து வரும் பகுதியில், பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான அக்ஷய் குமார் தோன்றுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார் அக்ஷய் குமார். அதில் பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து யானைக் கழிவில் போடப்பட்ட தேநீர் அருந்திய காட்சி இடம்பெற்றது. இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் தனது அடுத்த படமான ‘பெல்பாட்டம்’ படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது ஸ்காட்லாந்தில் இருக்கிறார் அக்ஷய்குமார். இப்படத்தின் நாயகிகளான லாரா தத்தா, ஹூமா குரேஷி, பியர் கிரில்ஸ் ஆகியோருடன் இணைந்து ஒரு இன்ஸ்டாகிராம் நேரலை நிகழ்வை அக்ஷய்குமார் நடத்தினார்.
இதில் நடிகை ஹூமா குரேஷி அக்ஷய் குமாரிடம் எப்படி யானை கழிவில் தயாரிக்கப்பட்ட தேநீரை குடிக்க எப்படி தயாரானீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அக்ஷய் ‘நான் கவலைப்படவில்லை. நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆயுர்வேத மருத்துவ காரணங்களுக்காக நான் தினமும் பசு கோமியம் குடித்து வருகிறேன். எனவே அது எனக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை’ என்றார்.