

இந்தி திரையுலகில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனாவையும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு சிவசேனா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை போல மகாராஷ்டிரா மாறியுள்ளது’ என்று கங்கனா கூறினார். சிவசேனாவுடனான இந்த மோதல் போக்கு காரணமாக அவர் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து மும்பை வருவதில் சிக்கல் எழுந்தது. எனினும், மத்திய அரசின் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்புடன் நேற்று முன்தினம் அவர் மும்பை வந்தார்.
இந்த சூழலில், அனுமதியை மீறி கட்டப்பட்டிருப்பதாக கூறி, கங்கனாவின் மும்பை அலுவலகத்தின் ஒரு பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் அன்றைய தினம் இடித்தனர். மும்பை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டை அடுத்து, இந்த நடவடிக்கை பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த புதன் (09.09.20) அன்று கங்கணா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த ஒரு வீடியோவில் சிவசேனா கட்சியையும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவையும் கடுமையாக சாடியிருந்தார்.
அந்த வீடியோவில் ‘உங்கள் தந்தையின் நல்ல காரியங்களால் உங்களுக்குச் செல்வம் சேரலாம். ஆனால், மரியாதையை நீங்கள்தான் சம்பாதிக்க வேண்டும். உங்களுடையது மன்னராட்சிக்கான உதாரணமே தவிர வேறெதுவும் இல்லை. மகாராஷ்டிர அரசின் இந்த மோசமான செயல் மராத்தியக் கலாச்சாரத்தையும், உலகில் அவர்களுக்கு இருக்கும் பெருமையையும் பாதிக்கக் கூடாது’ என்று கங்கணா பேசியிருந்தார்.
கங்கணா வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கடும் வைரலானது. ஏறக்குறைய 50 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் கங்கணா பேசியிருப்பதாக மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் கங்கணாவின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரளிக்கப்பட்டுள்ளது.
அதில் மும்பை விக்ரொலி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் கங்கணா மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருவதாக கூறப்பட்டுள்ளது.