ரியாவுக்கு ஆதரவு; கிண்டல் செய்தவர்களை நக்கலடித்த ஸோயா அக்தர்

ரியாவுக்கு ஆதரவு; கிண்டல் செய்தவர்களை நக்கலடித்த ஸோயா அக்தர்
Updated on
1 min read

ரியா சக்ரபர்த்திக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால் தன்னைக் கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு இயக்குநர் ஸோயா அக்தர் நக்கலான பதிலை அளித்துள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில், வித்யா பாலன், சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், டாப்ஸி, ஷிபானி உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் ரியா சக்ரபர்த்தியை ஆதரித்துப் பதிவிட்டுள்ளனர். இதனால் சமூக வலைதளப் பயனர்கள் பலர் இவர்களைக் கிண்டல் செய்தும், எதிர்த்துக் கருத்துப் பதிவிட்டும் வருகின்றனர்.

போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார் ரியாவைக் கைது செய்ததைத் தொடர்ந்து திரைத்துறையைச் சேர்ந்த சிலர், ரியாவுக்கு நீதி வேண்டும் என்று கூறி வருகின்றனர். மேலும் கைது செய்தபோது ரியா அணிந்திருந்த டி- ஷர்ட்டில் இருந்த ஆணாதிக்கம் தொடர்பான வாசகத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.

வித்யா பாலன் உள்ளிட்ட பலர் இந்த வாசகத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். ஸோயா அக்தரும் இதைப் பகிர்ந்திருந்தார். இதனால் ஸோயாவை விமர்சித்தும், எதிர்த்தும் கருத்துகள் பகிரப்பட்டன.

இந்தக் கருத்துகளுக்கு எதிராகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸோயா, தனது படங்களைப் புறக்கணிப்பதற்கு முன் தனது சமூக வலைதளப் பக்கங்களைப் புறக்கணியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

"கிண்டல் செய்பவர்: நான் உங்களைப் பின்தொடரப் போவதில்லை

ஸோயா: சரி

கிண்டல் செய்பவர்: நான் உங்கள் திரைப்படத்தைப் புறக்கணிக்கப் போகிறேன்

ஸோயா: முதலில் என் சமூக வலைதளப் பக்கத்தைப் புறக்கணியுங்கள்".

இவ்வாறு ஸோயா பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in