

தனது அலுவலகக் கட்டிடம் இடிக்கப்பட்டது தொடர்பாக மகாராஷ்டிர அரசை மன்னராட்சி என்று நடிகை கங்கணா ரணாவத் விமர்சித்துள்ளார்.
இந்தியில் ட்வீட் செய்திருக்கும் கங்கணா, "உங்கள் தந்தையின் நல்ல காரியங்களால் உங்களுக்குச் செல்வம் சேரலாம். ஆனால், மரியாதையை நீங்கள்தான் சம்பாதிக்க வேண்டும். என் வாயை உங்களால் மூட முடியும். ஆனால், எனக்குப் பிறகு இன்னும் கோடிக்கணக்கானவர்கள் மூலம் எனது குரல் எதிரொலிக்கும். எவ்வளவு வாயை உங்களால் மூட முடியும்? எவ்வளவு குரல்களை அடக்க முடியும்? எதுவரை உண்மையிலிருந்து தப்பியோட முடியும்? உங்களுடையது மன்னராட்சிக்கான உதாரணமே தவிர வேறெதுவும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, "எனது பல மராத்திய நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து கண்ணீர் சிந்தினர். பலரின் தொடர்பு எண்களைக் கொடுத்து உதவினர். சிலர் வீட்டிலிருந்து உணவு செய்து கொடுத்தனர். பாதுகாப்பு விதிமுறைகளால் என்னால் அதை ஏற்க முடியவில்லை. மகாராஷ்டிர அரசின் இந்த மோசமான செயல் மராத்தியக் கலாச்சாரத்தையும், உலகில் அவர்களுக்கு இருக்கும் பெருமையையும் பாதிக்கக் கூடாது. ஜெய் மகாராஷ்டிரா.
மகாராஷ்டிர அரசின் இந்த மோசமான நடவடிக்கைக்கு அம்மாநில மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பதை நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். எனது மராத்திய நல விரும்பிகள் பலர் என்னைத் தொடர்பு கொண்டு பேசினர். வருத்தத்தில் இருக்கும் உலக மக்களும், இமாச்சலப் பிரதேச மக்களும், எனக்கு இங்கு அன்பும் மரியாதையும் இல்லை என்று நினைக்கவில்லை" என்று கங்கணா பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தனது அலுவலகக் கட்டிடம் சட்டத்துக்குப் புறம்பாக இடிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்காதவர்களையும் கங்கணா விமர்சித்திருந்தார்.
"ஆடம்பரப் பெண்ணியவாதிகள், பாலிவுட் ஆர்வலர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி போகும் கும்பல்கள் மற்றும் விருதைத் திருப்பித் தரும் கூட்டங்கள் என யாருக்குமே, மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சாகடிக்கப்பட்டுள்ளது குறித்த உயர் நீதிமன்றத்தின் கருத்தைப் பற்றிச் சொல்ல எதுவுமில்லை. அற்புதம். நான் என்றும் சரி என்று நிரூபித்ததற்கு நன்றி. நான் உங்களை நடத்தும் விதத்துக்கு நீங்கள் உரியவர்களே" என்று கங்கணா தெரிவித்திருந்தார்.