

தனது படத்தைப் புறக்கணித்த ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராமுக்கு கங்கணா பதிலளித்துள்ளார்.
சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு கங்கணா ரணாவத் பல்வேறு முன்னணி திரையுலக பிரபலங்கள் மீது குற்றம்சாட்டி வருகிறார். இதனால் பாலிவுட்டில் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. தொடர்ச்சியாக இது தொடர்பாக விவாதித்து வந்த இந்தி ஊடகங்களை சமீபத்தில் சாடியிருந்தார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.
இதனைத் தொடர்ந்து இன்று (செப்டம்பர் 8) கங்கணா ரணாவத் பட வாய்ப்பு ஒன்றைப் புறக்கணித்துவிட்டதாக தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார் பி.சி.ஸ்ரீராம். அதில், "கங்கணா ரணாவத் பிரதான பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகச் சொன்னதால் ஒரு படத்தை ஒப்புக் கொள்ளவில்லை.
மனதின் ஆழத்தில் ஒரு அசவுகரியமான நிலையை உணர்ந்தேன். எனது நிலையை அவர்கள் தரப்புக்குச் சொன்னேன். அவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டார்கள். சில நேரங்களில், நம் மனதில் எது சரியென்று படுகிறதோ அதுதான் முக்கியம். அந்தத் திரைப்படக் குழுவுக்கு என் வாழ்த்துகள்" என்று தெரிவித்திருந்தார் பி.சி.ஸ்ரீராம்.
பி.சி.ஸ்ரீராமின் இந்தப் பதிவு பெரும் வைரலாக பரவியது. தற்போது பி.சி.ஸ்ரீராம் பதிவுக்குப் பதிலளிக்கும் விதமாக கங்கணா ரணாவத் கூறியிருப்பதாவது:
"உங்களைப் போன்ற ஆளுமையுடன் பணிபுரியும் வாய்ப்பை நான் தவறவிட்டுவிட்டேன் சார். இது முற்றிலும் என்னுடைய இழப்பு. என்னைப் பற்றிய உங்களுக்குச் சங்கடமான எண்ணம் ஏற்பட என்ன காரணம் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் சரியான வழியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கு வாழ்த்துகள்"
இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.