

நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை தொடர்பாக சிக்கல்கள் எழ சிபிஐ நடத்திய விசாரணையில், சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபர்த்தி உட்பட அவருக்கு நெருக்கமான சிலர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தனியாக வழக்குப் பதிவு செய்து, ரியா சக்ரபர்த்தியின் சகோதரர் ஷோயிக் சக்ரபர்த்தி மற்றும் சுஷாந்த் சிங்கின் மேலாளர் சாமுவேல் மிரண்டா ஆகியோரைக் கைது செய்தனர். இருவரையும் வரும் 9-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு மும்பை மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ரியா சக்ரபர்த்தியிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சுஷாந்த் தனது சகோதரி பிரியங்கா சிங்கிடம் உரையாடிய வாட்ஸ் அப் சாட் ஒன்று வெளியானது. அதில் சில மருந்துகளின் பெயர்களை குறிப்பிட்டு அதை உட்கொள்ளுமாறு சுஷாந்த்துக்கு அறிவுறுத்தியுள்ளார் ப்ரியங்கா சிங்.
இந்த உரையாடலை அடிப்படையாகக் கொண்டு ப்ரியங்கா சிங் மீது மும்பை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார் ரியா.
அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
சுஷாந்த் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னால் ப்ரியங்கா சுஷாந்த்திடம் சட்டவிரோதமான முறையில் சில மருந்துகளை பரிந்துரை செய்துள்ளார். இது போன்ற போலியான பரிந்துரையை சுஷாந்த்துக்கு செய்த ப்ரியங்கா சிங் மற்றும் ராம் மனோஹர் லோகியா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் தருண் குமார் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து சுஷாந்த்தின் குடும்ப வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறும்போது, ‘இதில் எந்தவிதமான குற்ற நடவடிக்கையும் இல்லை, இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்தபிறகு இதில் மும்பை காவல்துறையில் தலையீடு இருக்கவேண்டும் என்பதற்காகவே இப்படியொரு புகாரை ரியா கொடுத்துள்ளார்’ என்றார்.