

இந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் கபூருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதே வேளையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. பல்வேறு படங்களின் படப்பிடிப்புகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தித் திரையுலகில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது அதிலிருந்து முழுமையாக மீண்டு, குரோர்பதி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார் அமிதாப் பச்சன்.
தற்போது இந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் கபூருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார் அர்ஜுன் கபூர்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"எனக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை அனைவரிடமும் தெரிவிப்பது என் கடமை. நான் நன்றாக இருக்கிறேன். எந்த அறிகுறியும் இல்லை. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரையின்படி நான் வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் நாட்களில் என் உடல்நிலை குறித்து உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன். இவை கணிக்க இயலாத தனித்துவமான நாட்கள். மனிதம் இந்த வைரஸை வீழ்த்தும் என்று நான் நம்புகிறேன்".
இவ்வாறு அர்ஜுன் கபூர் தெரிவித்துள்ளார்.