

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில், அவரது காதலி ரியா சக்கரவர்த்தியின் சகோதரர் ஷோயிக் சக்கரவர்த்தியை வரும் 9-ம் தேதி வரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங்கின் உடல், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில், சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தி உட்பட அவருக்கு நெருக்கமான சிலர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இதுதொடர்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தனியாக வழக்கு பதிவு செய்து, ரியா சக்கரவர்த்தியின் சகோதரர் ஷோயிக் சக்கரவர்த்தி மற்றும் சுஷாந்த் சிங்கின் மேலாளர் சாமுவேல் மிரண்டா ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரையும் வரும் 9-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு மும்பை மாவட்ட நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.