

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டுள்ளதா என்ற விசாரணையில், போதை மருந்து தடுப்புப் பிரிவால் ரியா சக்ரபர்த்தியின் சகோதரர் ஷௌவிக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத் இல்லத்தின் மேலாளர் சாமுயல் மிராண்டாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு, அந்த வழக்கில் ஏற்பட்ட சர்ச்சையால் சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுஷாந்த் சிங் இருந்த வீடு, தங்கிய இடங்கள், காதலி ரியா, ரியாவின் சகோதரர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்பு போதை மருந்துகள் ஏதேனும் பின்னணியில் உள்ளனவா என்ற ரீதியில் போதை மருந்து தடுப்புப் பிரிவினர், விசாரணையைத் தொடங்கினர். அதில் ஷெளவிக் மற்றும் மிராண்டா ஆகியோரிடம் சுமார் 10 மணி நேர விசாரணைக்குப் பிறகு இருவரையும் கைது செய்ததாக போதை மருந்து தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.
முன்னதாக ஷௌவிக் மற்றும் மிராண்டா ஆகியோரின் இல்லங்களில் போதை மருந்து தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், ஷௌவிக்கின் லேப்டாப் மற்றும் செல்போனைக் கைப்பற்றியுள்ளனர்.
அப்துல் பஸித் பரிஹார் என்கிற போதை மருந்து விற்பவரிடம் ஷௌவிக், கஞ்சா மற்றும் மரிஜுவானா ஆகிய போதை மருந்துகளை வாங்கி, அதற்கான பணத்தை கூகுள் பே மூலம் செலுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.