செப்.9-ம் தேதி மும்பை வருகிறேன்; முடிந்தால் தடுத்துப் பாருங்கள்: சிவசேனா எம்.பி.க்கு கங்கணா ரணாவத் சவால்

செப்.9-ம் தேதி மும்பை வருகிறேன்; முடிந்தால் தடுத்துப் பாருங்கள்: சிவசேனா எம்.பி.க்கு கங்கணா ரணாவத் சவால்
Updated on
1 min read

தன்னை மும்பைக்குத் திரும்ப வர வேண்டாம் என்று கூறிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு நடிகை கங்கணா ரணாவத் சவால் விடுத்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட், போதைப் பொருள், வாரிசு அரசியல் என்று அடுத்தடுத்த குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நடிகை கங்கணா ரணாவத், சில நாட்களுக்கு முன்பு மும்பை காவல்துறையையும் சாட ஆரம்பித்தார்.

மேலும், மும்பை காவல்துறையால் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் வெளிப்படையாகக் கூறிய கங்கணா, "சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், நான் மும்பை வரக்கூடாது என வெளிப்படையாக மிரட்டியுள்ளார். மும்பை வீதியின் சுவர்களில் விடுதலை வேண்டும் என்ற சுவரோவியங்களுக்குப் பின் இப்போது வெளிப்படையான மிரட்டல்களும் வருகின்றன. ஏன் மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போலத் தோன்றுகிறது" என்று ட்வீட் செய்திருந்தார்

இதற்குப் பதிலளித்திருந்த சஞ்சய் ராவத், கங்கணா ரணாவத் மும்பை காவல்துறையையும், மகாராஷ்டிர மாநிலத்தையும் அவமானப்படுத்தியுள்ளார் என்றும், அவ்வளவு பயமிருப்பவர் மும்பைக்குத் திரும்ப வேண்டாம் என்றும் கூறியிருந்தார். மேலும், கங்கணா மீது உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

தற்போது இதற்குப் பதில் அளித்திருக்கும் கங்கணா, "மும்பைக்கு நான் திரும்ப வர வேண்டாம் எனப் பலரும் அச்சுறுத்துவதைப் பார்க்க முடிகிறது. எனவே, வரும் வாரம், செப்டம்பர் 9-ம் தேதி அன்று நான் மும்பைக்கு வர முடிவெடுத்துள்ளேன். மும்பை விமான நிலையத்தை நான் அடையும் நேரத்தைப் பகிர்கிறேன். முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்" என்று கங்கணா கூறியுள்ளார்.

கங்கணா தற்போது தனது சொந்த ஊரான மணாலியில் ஊரடங்கு நாட்களைக் கழித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in