

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு நீதி கேட்டு அமெரிக்காவில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் நீக்கப்பட்டுள்ளன. சிலர் திட்டமிட்டு, பணம் கொடுத்து அதை நீக்கவைத்துள்ளார்கள் என்று சுஷாந்தின் சகோதரி ஷ்வேதா சிங் கீர்த்தி கூறியுள்ளார்.
இந்த விளம்பரப் பலகைகள் தொடர்பாக அமெரிக்க நிறுவனம் தனக்கு அனுப்பிய மின்னஞ்சலையும், அதற்குத் தான் அனுப்பிய பதிலையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஷ்வேதா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
மின்னஞ்சலில், அந்நிறுவனம், "எங்கள் குழு இந்தப் பிரச்சாரம் குறித்து சரியாக ஆய்வு செய்யவில்லை. சுஷாந்துடன் தொடர்புடைய பெண்ணுக்கு எதிரான பிரச்சாரம் என்பதே குழுவின் புரிதல். எனவே, எங்கள் நிறுவனம் இந்தப் பிரச்சாரம் தொடர்பாக சம்பந்தப்பட விரும்பவில்லை. வரும் நாட்களில் உங்கள் பணம் திரும்பத் தரப்படும். நன்றி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்திருக்கும் ஷ்வேதா, "சரி, அப்படியென்றால் செப்டம்பர் 1-6 காலகட்டத்துக்கான முழுப் பணமும் திரும்பக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். மேலும், அதிகாரபூர்வமாக இதைத் தெரிவிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்த மின்னஞ்சலைப் பகிர்ந்து, பண உதவி செய்தவர்களிடம், ஏன் விளம்பரப் பலகைகள் என்று நான் விளக்க வேண்டும். நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நிறுவனம் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் அந்தப் பெண், சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. ரியா மற்றும் அவரது குடும்பத்துக்கு எதிராக சுஷாந்த் தரப்பு தொடர்ந்துள்ள வழக்கையே பெண்ணுக்கு எதிரான பிரச்சாரம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இந்த மின்னஞ்சல்களைப் பகிர்ந்துள்ள ஷ்வேதா, "பணம் கொடுத்து இப்படித் தடுக்கும் வேலை எல்லா இடத்திலும் சென்றிருக்கிறதுபோல. ஹாலிவுட் விளம்பரப் பலகை நிறுவனம் ஏன் இனி இந்த விளம்பரத்தைத் தொடரமாட்டோம் என்று சொல்லத் தொடர்பு கொண்டுள்ளனர். அந்த விளம்பரப் பலகைகளில் சுஷாந்த் வழக்கில் நியாயமான விசாரணையும் நீதியும் வேண்டுமென்றுதான் வார்த்தைகள் இருந்தன" என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நியூஜெர்ஸி, சிகாகோ உள்ளிட்ட பல இடங்களில் சுஷாந்த் வழக்கில் நீதி கேட்டு விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.