வாரணாசி படகோட்டிகளுக்கு உதவிய சோனு சூட்: 350 குடும்பங்களுக்கு உணவு

வாரணாசி படகோட்டிகளுக்கு உதவிய சோனு சூட்: 350 குடும்பங்களுக்கு உணவு
Updated on
1 min read

வாரணாசியில் இருக்கும் படகோட்டிகளின் குடும்பங்கள், வெள்ளம் காரணமாக உணவின்றித் தவிப்பதாக ஒரு சமூக ஆர்வலர் சோனுவைத் தொடர்பு கொண்டிருக்கிறார். சோனு சூட் உடனடியாக உதவி செய்ய முடிவெடுத்துள்ளார்.

திவ்யான்ஷு உபாத்யாயா என்கிற சமூக ஆர்வலர், செவ்வாய்க்கிழமை அன்று சோனுவுக்கு ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இதில் வாரணாசி கங்கை நதிக் கரையில் படகோட்டும் 350 படகோட்டிகளின் குடும்பங்கள், வெள்ளம் காரணமாக வருமானமின்றி, பட்டினியாக இருப்பதாகக் கூறினார்.

ஒரு மணி நேரத்தில் பதில் சொன்ன சோனு சூட், "வாரணாசிக் கரையோரம் இருக்கும் இந்த 350 குடும்பங்களைச் சேர்ந்த யாரும் இன்றிலிருந்து பட்டினியோடு தூங்க மாட்டார்கள்" என்று குறிப்பிட்டார். இதன் பிறகு, சோனு சூட் அணியைச் சேர்ந்த நீதி கோயல், உபாத்யாயாவைத் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு, ஒரு மணி நேரத்தில், வாரணாசியிலேயே தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

"விரைவாக சோனு சூட் தரப்பிடமிருந்து எங்களுக்கு 350 மளிகைப் பொருட்கள் பொட்டலங்கள் கிடைத்தன. ஒவ்வொன்றிலும் 5 கிலோ கோதுமை, 5 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, ஒரு மசாலா பொட்டலம் மற்றும் சில உணவுப் பொருட்களும் இருந்தன. 350 பொட்டலங்களில் 100 பொட்டலங்கள் உடனடியாக அந்தந்தக் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன" என் உபாத்யாயாவின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

இந்தப் பொருட்கள் உள்ளூர் வியாபாரிகளிடம் வாங்கப்பட்டுள்ளன. அதற்கான பணத்தை சோனு சூட் கொடுத்துள்ளார்.

உபத்யாயாவின் தொண்டு நிறுவனம், நிவாரணப் பொருட்களைப் பலருக்கு வழங்கி வருகிறது. ஆனால் அவர்களிடமிருந்த 200 உணவுப் பொட்டலங்கள் போதாமல் போனதால்தான் சோனு சூட் செய்து வரும் அற்புதமான நல உதவிகளைப் பார்த்து அவருக்கு ட்வீட் செய்ததாக உபாத்யாயா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in