திரைப்பட மாஃபியாவின் முக்கிய குற்றவாளி கரண் ஜோஹர்: ட்விட்டரில் பிரதமர் மோடியிடம் கங்கணா முறையீடு

திரைப்பட மாஃபியாவின் முக்கிய குற்றவாளி கரண் ஜோஹர்: ட்விட்டரில் பிரதமர் மோடியிடம் கங்கணா முறையீடு
Updated on
1 min read

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் பாலிவுட் உலகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

வாரிசு நடிகர்களாலும், வாரிசு நடிகர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொடுத்த மன உளைச்சலால்தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது இந்த மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுஷாந்த் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டின் வாரிசு நடிகர்களை நடிகை கங்கணா ரணாவத் தொடர்ந்து சாடிப் பேசி வருகிறார். தனது சமூக வலைதளப் பக்கங்களில் சுஷாந்த் தற்கொலை தொடர்பாகவும், பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியலுக்கு எதிராகவும் தொடர்ந்து பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரது ரசிகர்களும் கரண் ஜோஹர், சல்மான் கான், ஆலியா பட் இன்னும் பல்வேறு வாரிசு நடிகர்களின் சமூக வலைதளப் பக்கங்களுக்குச் சென்று அவர்களைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் திரைப்பட மாஃபியாவின் முக்கிய குற்றவாளி கரண் ஜோஹர் தான் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கங்கணா ட்விட்டரில் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கணா கூறியுள்ளதாவது:

‘திரைப்பட மாஃபியாவின் முக்கிய குற்றவாளியே கரண் ஜோஹர். பலரது வாழ்க்கையையும், வேலையையும் நாசமாக்கிய பிறகும் கூட அவர் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார். அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு ஏதேனும் நம்பிக்கை உண்டா? அனைத்தும் சரியானதும் செய்யப்பட்டதும் அவரது கழுதைப்புலி கூட்டம் என்னை தேடி வரப்போகின்றன.’

இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.

அவரது இந்த பதிவில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை டேக் செய்துள்ளார் கங்கணா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in