

சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற மராத்திய மொழி படமான 'கோர்ட்' இந்தியாவின் தேர்வாக ஆஸ்கருக்குப் போட்டியிடவுள்ளது.
ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான ஆஸ்கரில், மற்ற நாட்டு திரைப்படங்களுக்கென ஒரே ஒரு பிரிவு மட்டுமே உள்ளது. சிறந்த அந்நிய மொழித் திரைப்படம் என்ற அந்தப் பிரிவில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் போட்டியிடும். தற்போது இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் ’கோர்ட்’, இறுதிப் பட்டியலில் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மூத்த நடிகரும், இயக்குநருமான அமோல் பலேகர் தலைமையில், 16 பேர் கொண்டு நடுவர் குழு ஒருமனதாக 'கோர்ட்' படத்தை தேர்ந்தெடுத்துள்ளது.
சமூகத்துக்காகப் போராடும் வயதான கவிஞர் ஒருவர் மீது வழக்கு தொடரப்படுகிறது. அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை. இந்திய நீதித்துறையின் செயல்பாடு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பும் 'கோர்ட்', குற்றம் சாட்டப்பட்டவர், அவருக்காக வாதாடும் வக்கீல், அரசு வழக்கறிஞர், அந்த வழக்கை பார்வையிடும் நீதிபதி என பலரின் பார்வையில் விரிகிறது.
இம்முறை இந்தத் தேர்வுக்கு, 'மாசான்', 'பிகே', 'ஹைதர்', 'காக்கா முட்டை', 'பாஹுபலி' உள்ளிட்ட 30 படங்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
'தி இந்து' தமிழில் வெளியான கோர்ட் படத்தின் விமர்சனத்தைப் படிக்க --> >'கோர்ட்' விமர்சனம்