சொந்த ப்ராண்ட் முகக் கவசம் - ட்விட்டரில் கிண்டலுக்கு ஆளான சல்மான் கான்

சொந்த ப்ராண்ட் முகக் கவசம் - ட்விட்டரில் கிண்டலுக்கு ஆளான சல்மான் கான்
Updated on
1 min read

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், பலரும் சமூக வலைதளங்களில் இயங்கி வரும் வாரிசு நடிகர்களின் பக்கங்களுக்கே நேரடியாகச் சென்று அவர்களைச் சாட ஆரம்பித்தனர்.

மேலும், கரண் ஜோஹர், சல்மான் கான் உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கரண் ஜோஹர், சல்மான் கான் ஆகியோரது உருவ பொம்மைகளை எரிக்கும் சம்பவங்களும் கூட நடந்தன.

சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக சுஷாந்த் சிங் ரசிகர்கள், முன்னணி நடிகர்கள் பலரையும் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று (14.08.20) நடிகர் சல்மான் கான் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் தன்னுடைய சொந்த நிறுவனமான ‘பீயிங் ஹ்யூமன் க்லோத்திங்’ தயாரித்த முகக் கவசம் ஒன்றை அணிந்திருந்தார் சல்மான் கான்.

‘பீயிங் ஹ்யூமன்’ என்ற பெயரை கிண்டல் செய்யும் தொனியில் ட்விட்டர்வாசி ஒருவர் ‘கிரிமினலான இவர் 10 ரூபாய் தானம் செய்து விட்டு அதை சமூக வலைதளம், செய்தித்தாள்களில் 1000 ரூபாய் என்று விளம்பரம் செய்வார். வழக்கம்போல தான் செய்த குற்றங்களை மறைத்து விடுவார்.’ என்று பின்னூட்டத்தில் விமர்சித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பலரும் சல்மான் கான கடுமையாக சாட தொடங்கி விட்டனர். சுஷாந்த்துக்கு நீதி கிடைக்க சல்மான் கானின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பின்னூட்டங்களில் கூறினர்.

ஏற்கெனவே ஒருமுறை நடிகை சுஷ்மிதா சென்னுக்கு சல்மான் வாழ்த்து தெரிவித்து பகிர்ந்த பதிவொன்றில் இதேபோல பலரும் அவரை கடுமையாக சாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in