

மகேஷ் பட் இயக்கத்தில் சஞ்சய் சத், சித்தார்த் ராய் கபூர், அலியா பட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சடக் 2'. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்கு வெளியீடு இல்லாமல் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
ஆகஸ்ட் 12-ம் தேதி 'சடக் 2' ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் ட்ரெய்லருக்கு இதுவரை டிஸ்லைக்ஸ் மட்டுமே 7 மில்லியனைத் தாண்டிவிட்டது. இந்திய படங்களின் ட்ரெய்லர்களில் அதிக டிஸ்லைக்குகள் பெற்ற ட்ரெய்லர் என்ற பேரை வாங்கியுள்ளது 'சடக் 2'. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
தற்போது இன்னொரு புதிய பிரச்சினையை ‘சடக் 2’ படக்குழுவினர் சந்தித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ‘இஷ்க் கமால்’ என்ற பாடல் தன்னுடைய இசையில் 2011ஆம் ஆண்டு வெளியான ஒரு பாடலின் காப்பி என்று குற்றம் சாட்டியுள்ளார் இசையமைப்பாளர் ஜோ -ஜி என்று அழைக்கப்படும் சேஸன் சலீம்.
இந்நிலையில் ‘சடக் 2’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள சுனிலிஜீத் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இது குறித்து சுனிலிஜீத் கூறியுள்ளதாவது:
‘இஷ்க் கமால்’ பாடல் என்னுடைய சொந்த இசையில் உருவான பாடல். அது எந்த பாடலின் பாதிப்பிலும் உருவாகவில்லை. பாடகர் ஜாவேத் அலி உட்பட இப்பாடல் உருவாக்கத்தில் ஈடுபட்ட அனைவரும் இப்பாடலில் மாயாஜாலத்தை சேர்த்துள்ளனர்.
இசையமைப்பாளராக இது எனக்கு முதல் படம். அந்த பாடல் வெளியாகும்போது மக்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு சுனிலிஜீத் கூறியுள்ளார்.