'சடக் 2' ட்ரெய்லர்: அதிருப்தியாளர்களுக்கு பூஜா பட் பதிலடி
'சடக் 2' ட்ரெய்லர் தொடர்பாக உலவி வரும் சர்ச்சைகளுக்குப் பதிலடிக் கொடுத்துள்ளார் பூஜா பட்.
மகேஷ் பட் இயக்கத்தில் சஞ்சய் சத், சித்தார்த் ராய் கபூர், அலியா பட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சடக் 2'. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்கு வெளியீடு இல்லாமல் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
மேலும், சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு வாரிசு அரசியல் சர்ச்சை பாலிவுட்டில் பெரிதாக வெடித்துள்ளது. இதனிடையே ஆகஸ்ட் 12-ம் தேதி 'சடக் 2' ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. இந்தச் சர்ச்சை 'சடக் 2' ட்ரெய்லரிலும் தெரிந்தது.
எப்படியென்றால், இந்த ட்ரெய்லருக்கு இதுவரை டிஸ்லைக்ஸ் மட்டுமே 7 மில்லியனைத் தாண்டிவிட்டது. இந்தியாவில் தயாரான படங்களின் ட்ரெய்லர்களில் அதிக டிஸ்லைக்குகள் பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது 'சடக் 2'. இதனால் 'சடக் 2' படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்தார்கள்.
மேலும், "'சடக் 2' ட்ரெய்லர் டிஸ்லைக்குகள் குறித்து கவலை வேண்டாம். ஏனென்றால் ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் ட்ரெண்ட்டாகிக் கொண்டிருக்கிறது" என்று மகேஷ் பட்டின் மகள் பூஜா பட்டின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு ரசிகர் ஒருவர் தெரிவித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பூஜா பட் கூறியிருப்பதாவது:
"நான் சுத்தமாகக் கவலைப்படவில்லை. ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான் விரும்புபவர்களும் / வெறுப்பவர்களும். அவர்களது விலையுயர்ந்த நேரத்தை நமக்காகக் கொடுத்து நாம் ட்ரெண்ட் ஆக வேண்டும் என்பதை உறுதி செய்வதால் அவர்களைப் பாராட்ட வேண்டும். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி"
இவ்வாறு பூஜா பட் தெரிவித்துள்ளார்.
