

விதிகளைப் பின்பற்றுவதை விட தன் இதயம் சொல்வதைப் பின்பற்றுவது தனக்கு எளிதாக உள்ளது என நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.
சின்னத்திரையில் ஆரம்பித்து தற்போது பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகத் திகழ்கிறார் வித்யா பாலன். 'டர்டி பிக்சர்' திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார். கடைசியாக இவர் நடிப்பில் 'ஷகுந்தலா தேவி' திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியானது. அதற்கும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது கோவிட்-19 நெருக்கடியால் வித்யா பாலனின் அடுத்த படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது:
"நமக்கு இயற்கையாக வராத ஒன்றை நாம் செய்யும்போது அது நமக்கு மிகக் கடினமாக இருக்கும். அதை நான் சில வருடங்களுக்கு முன் உணர்ந்தேன். 10 வருடங்களுக்கு முன் நான் என் மனம் சொல்வதைக் கேட்டுப் பின்பற்ற ஆரம்பித்தேன். அது எளிதாக இருந்தது.
நான் என்னை எந்த விதத்திலும் புரட்சி முடிவு எடுப்பவளாகப் பார்க்கவில்லை. தங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ அதை செய்யாமல் தங்களுக்குப் பிடித்ததைச் செய்யும் போது அவர்கள் புரட்சி முடிவு எடுப்பதாகக் கூறுகிறோம் என நினைக்கிறேன்.
எனக்கு அப்படி எந்த ஒரு புரட்சி நோக்கமும் கிடையாது. எனக்குப் பிடித்ததைச் செய்தேன். ஆனால் என்னை இப்படி அழைப்பார்கள் என்று எனக்குத் தெரியும்"
இவ்வாறு வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.