

அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரீஸுக்கு ப்ரியங்கா சோப்ரா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாகப் போட்டியிடும் முதல் அமெரிக்க ஆப்பிரிக்கப் பெண் இவரே. கமலா ஹாரிஸின் தாய் ஒரு இந்தியர், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். இதனால் உலகம் முழுவதுமுள்ள இந்தியர்கள், பிரபலங்கள் பலரும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''நிற பேதமின்றி, அனைத்துக் கறுப்பினப் பெண்களுக்கும், அனைத்துத் தெற்காசியப் பெண்களுக்கும், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க, திருப்புமுனையான, பெருமைமிகு தருணம். அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இந்தியப் பூர்வீகத்தை கொண்ட, முதல் கறுப்பினப் பெண்ணான கமலா ஹாரீஸுக்கு வாழ்த்துகள்''.
இவ்வாறு ப்ரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.