5 மில்லியனைக் கடந்த டிஸ்லைக்குகள்: 'சடக் 2' படக்குழுவினர் அதிர்ச்சி

5 மில்லியனைக் கடந்த டிஸ்லைக்குகள்: 'சடக் 2' படக்குழுவினர் அதிர்ச்சி
Updated on
1 min read

'சடக் 2' படத்தின் ட்ரெய்லர், 5 மில்லியனைக் கடந்து டிஸ்லைக்குகள் பெற்றிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் குறித்த கருத்துகள் கடுமையாக எதிரொலித்து வருகின்றன. தொடர்ச்சியாக கரண் ஜோஹர், ஆலியா பட் உள்ளிட்ட பாலிவுட் வாரிசுகளைக் குறிவைத்து, தாக்கிப் பேசி வருகிறார்கள்.

இதனிடையே, மகேஷ் பட் இயக்கத்தில் அவரது மகள்கள் ஆலியா பட், பூஜா பட் நடித்திருக்கும் 'சடக் 2' படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. இந்தப் படம் திரையரங்க வெளியீடாக இல்லாமல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

நேற்று (ஆகஸ்ட் 12) 'சடக் 2' படத்தின் ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. உடனடியாக சமூக வலைதளப் பயனர்கள் ஒன்றிணைந்து, 'சடக் 2' ட்ரெய்லருக்கு எதிராகக் களமிறங்கினார்கள். எப்படியென்றால் ட்ரெய்லருக்கு டிஸ்லைக்குகள் தெரிவித்தனர்.

இதனால், ட்ரெய்லர் வெளியாகி 12 மணி நேரத்துக்குள் 1.5 மில்லியன் டிஸ்லைக்குகளைப் பெற்றது. இதன் மூலம் இந்தியாவில் தயாரான ஒரு படத்தின் ட்ரெய்லருக்கு அதிகமான டிஸ்லைக்குகள் பெற்றது 'சடக் 2' தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு நின்றுவிடவில்லை. தொடர்ச்சியாக டிஸ்லைக்குகள் க்ளிக் செய்யவே, ட்விட்டரில் #Dislike என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது. தற்போது ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரம் தாண்டியுள்ள நிலையில், 'சடக் 2' ட்ரெய்லருக்கு டிஸ்லைக்குகள் 5 மில்லியனைத் தாண்டியுள்ளது. கண்டிப்பாக இது உலக அளவில் சாதனைக்குரிய ஒன்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. தற்போது யூடியூப் தளத்தில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வரும் இந்த ட்ரெய்லர் இதுவரை 1 கோடி வியூஸைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த டிஸ்லைக்குகள் எண்ணிக்கையால் படக்குழுவினர் மட்டுமல்லாது, முன்னணி நடிகர்கள் பலரும் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in