சில காட்சிகளை நீக்க வேண்டும்: ‘குஞ்சன் சக்ஸேனா’ படக்குழுவினருக்கு இந்திய விமானப் படை கடிதம்

சில காட்சிகளை நீக்க வேண்டும்: ‘குஞ்சன் சக்ஸேனா’ படக்குழுவினருக்கு இந்திய விமானப் படை கடிதம்
Updated on
1 min read

கரண் ஜோஹரின் 'தர்மா புரொடக்‌ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’. இப்படம் இந்திய விமானப்படையின் முதல் பெண் விமான ஓட்டியான குஞ்சன் சக்ஸேனாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் குஞ்சன் சக்ஸேனா கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இப்படத்துக்காக ஜான்வி கபூர், குஞ்சன் சக்ஸேனாவுடன் சில நாட்களைச் செலவழித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் நேற்று (ஆகஸ்ட் 12) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.

இந்நிலையில் ‘குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’ படத்தில் வரும் சில காட்சிகளும், வசனங்களும் இந்திய விமானப்படைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், தர்மா புரொடக்‌ஷன்ஸ், நெட்ஃப்ளிக்ஸ் ஆகியவற்றுக்கு இந்திய விமானப் படை கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய விமானப்படை குறித்த நம்பகத்தன்மையுடன் பிரதிநிதித்துவப்படுத்தவும், அடுத்த தலைமுறை அதிகாரிகளுக்கு ஊக்கமளிக்கவும் படம் உதவுகிறது என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக தர்மா புரொடக்‌ஷன்ஸ் ஒப்புக் கொண்டது.

ஆனால் முன்னாள் விமானப்படை அதிகாரி குஞ்சன் சக்ஸேனாவை பெருமைப்படுத்தும் நோக்கில் தர்மா புரொடக்‌ஷன்ஸ் சில காட்சிகளில் இந்திய விமானப்படை பணி சூழல் குறித்து, குறிப்பாக விமானப்படையில் உள்ள பெண்கள் குறித்தும் தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்திய விமானப் படை எப்போதும் பாலின பேதமின்றி, ஆண் மற்றும் பெண் அதிகாரிகளுக்கு சம உரிமை வழங்கி வருகிறது.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு தயாரிப்பு நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. எனினும் தயாரிப்பு நிறுவனம் அது போன்ற எந்த காட்சிகளையும் நீக்காமல் திரைப்படத்துக்கு முன்னால் மறுப்பு ஒன்றை சேர்த்துள்ளது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in