

ப்ரியங்கா சோப்ரா எழுதியுள்ள சுயசரிதையான ‘அன்ஃபினிஷ்டு’ புத்தகம் வெளியீட்டு தயாராக உள்ளது.
2000-ம் ஆண்டு இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டு பின்னர் அதே ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா. நடிகர் விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் ஏராளமான படங்களில் நடித்து பாலிவுட் உலகின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். இதுதவிர ஹாலிவுட் படங்கள், வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராக ப்ரியங்கா சோப்ராவை அறிவித்தது.
இந்நிலையில் 38 வயதாகும் ப்ரியங்கா சோரா தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘அன்ஃபினிஷ்டு’ என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதி வந்தார். தற்போது அந்த புத்தகத்தை எழுதிமுடித்து விட்டதாகவும் விரைவில் பதிப்பிக்கப்பட்டு புத்தகமான வெளியாகும் என்றும் ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ப்ரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘அன்ஃபினிஷ்டு’ முடிந்துவிட்டது. இறுதி வடிவம் பதிப்பகத்துக்கு அனுப்ப தயாராகவுள்ளது. அதை உங்கள் அனைவரிடம் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். என் சுயசரிதையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் என் வாழ்வில் உள்ள சுயபரிசோதனை மற்றும் பிரதிபலிப்பு ஆகியவற்றிலிருந்து பிறந்துள்ளது.
இவ்வாறு ப்ரியங்கா கூறியுள்ளார்.
‘அன்ஃபினிஷ்டு’ புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் என்ற பதிப்பகம் விரைவில் வெளியிடுகிறது.