'அத்ரங்கி ரே' அப்டேட்: தனுஷுக்கு நாயகியாகும் டிம்பிள் ஹயாதி?

'அத்ரங்கி ரே' அப்டேட்: தனுஷுக்கு நாயகியாகும் டிம்பிள் ஹயாதி?
Updated on
1 min read

'அத்ரங்கி ரே' படத்தில் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் டிம்பிள் ஹயாதி எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான இந்திப் படம் 'ராஞ்சனா'. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் மூலமே, இந்தித் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார் தனுஷ். அதற்குப் பிறகு 'ஷமிதாப்' படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் தனுஷ்.

தற்போது மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் 'அத்ரங்கி ரே' இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ். இதில் அக்‌ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார். அக்‌ஷய் குமார் - சாரா அலிகான் காட்சிகளை பிஹாரிலும், தனுஷ் - சாரா அலிகான் காட்சிகளை மதுரையிலும் காட்சிப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

அக்டோபர் மாதத்தில் தனுஷ் - சாரா அலிகான் காட்சிகள் மதுரையில் படப்பிடிப்பு செய்யப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே, தற்போது இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் டிம்பிள் ஹயாதி. இவர் பிரபுதேவா நடிப்பில் வெளியான 'டிம்பிள் ஹயாதி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்.

அந்தப் படத்துக்குப் பிறகு தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார். அவர் இந்தியில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள முதல் படமாக 'அத்ரங்கி ரே' அமைந்துள்ளது. இதில் யாருக்கு ஜோடி, என்ன கதாபாத்திரம் என்பதெல்லாம் சஸ்பென்ஸ் என்கிறார்கள்.

'அத்ரங்கி ரே' படத்தை டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in