துருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு

துருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு
Updated on
1 min read

நடிகர் ஆமிர் கான், தனது 'லால் சிங் சட்டா' திரைப்படத்தின் படப்பிடிப்பை துருக்கியில் தொடங்கவுள்ளார். துருக்கியில் ஆமிர் கான் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம் இது. ஹாலிவுட்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனப் பெயர் பெற்று, உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்ட திரைப்படம்.

இன்றளவும் இந்தப் படத்தின் வசனங்களும், காட்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த கிராபிக்ஸ், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளையும் இப்படம் அள்ளியது.

தற்போது இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கில் ஆமிர் கான் நடித்து வருகிறார். மார்ச் மாதம் ஊரடங்குக்கு முன் வரை டெல்லி, ராஜஸ்தான், சந்தீகர், அம்ரிஸ்தர், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்தது. எல்லையில் சீன ராணுவத்தால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக லடாக்கில் திட்டமிடப்பட்டிருந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

தற்போது இந்தியாவில் படப்பிடிப்புக்குத் தோதான சூழல் இல்லை என்பதால் துருக்கியில் படப்பிடிப்பைத் தொடர படக்குழு முடிவு செய்து அதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. துருக்கியில் ரசிகர்களுடன் ஆமிர் கான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. மூக்குக் கண்ணாடியுடன், சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் ஆமிர் கான் உள்ளார்.

துருக்கி படப்பிடிப்பைத் தொடர்ந்து ஜார்ஜியாவிலும் படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது. கரீனா கபூர், விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்த வருடம் கிறிஸ்துமஸ் வெளியீடாகத் திட்டமிடப்பட்டிருந்த 'லால் சிங் சட்டா' தற்போது ஏற்பட்டுள்ள தாமதத்தால் அடுத்த வருடம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in